வாழ்க்கையின் மிக கொடுமையான காலகட்டம், படித்து முடித்து, வேலை தேடும் நாட்கள்தான். வீட்டுக்கு வருபவர்கள், சாதரணமாக நம்மை பார்த்து கேட்கும் கேள்விகள் கூட குதர்க்கமானதாகத் தோன்றும். யாரவது 'என்ன செஞ்சுட்டு இருக்க' என்று கேட்டால், என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் ஒரு நிமிடம் முழித்து, பின் சமாளிக்கும் அந்த கணங்கள் மிக கடுமையானவை. வாழ்வின் கசப்பு ருசி மெலிதாக நாவில் ஊற துவங்கும் காலம் அது. செய்வதறியாமல், வெறுமனே அமர்ந்திருக்கும் பொழுதுகளில், நசசு போல், தனிமை உடலெங்கும் பரவுகிறது. இருள் சூழ்வதை விட, தனிமை, வெகு வேகமாய், படர்ந்து கிளைக்கின்றது. ஆயிரம் வாயுடைய அசுரனை போல், கவலைகள், நம் தனிமையை தின்று வளர்கின்றன. உடன் படித்தவர்கள் ஒவ்வொருவராக, வேலை கிடைத்து, நம்மிடம் பகிர்ந்து கொள்ளும்பொழுது, கண்களில் துளிர்க்கின்ற கண்ணீரை யாருமறியாது துடைப்பது பழகி விடுகின்றது. படிக்கும் காலங்களில், பொய் சொல்லி வீட்டில் பணம் வாங்கியது போய், இப்பொழுது அவசியத்திற்க்கு கூட பணம் கேட்க வெட்கமாக இருக்கின்றது. என் நண்பொனுருவன், வீட்டில் பணம் கேட்க கூச்சப்பட்டு, முடி திருத்தாமல் இருந்ததை அறிவேன். முடிவாக வேலை தேடி, தலை நகர்க்கு வந்து, நண்பர்களுடன், தங்கும் காலங்கள், வாழ்நாளெல்லாம் மனதில் கனத்திருக்கும். சாப்பாடு வாங்க கூட காசில்லாமல், அறையில் சுவரை பார்த்துக் கொண்டே, ஒரெ சிகரெட்டை ஐந்து பேர் பகிர்ந்து கொண்டு, பேசிக் கொண்டிருக்கும் சுகம், அனுபவித்தவர்களுக்கு மட்டுமே தெரியும். முடிவாக ஒவ்வொருவராக வேலை கிடைத்து, அவரவர் வாழ்வில் தொலைந்து போனாலும், பிறிதொரு நாள் சந்திக்கும்பொழுது, அந்த நாட்களின் மகிழ்ச்சியும், வலியும், கண்களில் மிச்சமிருக்கும்!
Thursday, 13 December 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment