வாழ்க்கையில் என்றைக்காவது, கொட்டும் மழையில், நாவை நீட்டிக் கொண்டு நடந்து சென்று இருக்கிறீர்களா? அது ஒரு தனி ருசி. சொட்டு சொட்டாக மழை நீர் நாவில் விழுந்து, அதன் சாறு உள் இறங்கையில், உலகத்தின் அத்தனை ரசமும் நம்முள்ளே கலப்பது போன்ற ஒரு உணர்ச்சி. மழை நம்முடன் ஒரு நண்பனாக, ஒரு ஆசிரியனாக, ஒரு காதலியாக கரம் கோர்த்து உடன் நடந்து வருவது போன்ற ஒரு உவகை, அளப்பறியா ஆனந்தம் நம்மை சுற்றி கொள்ளும். மழை பெய்யும் பின்னிரவு பொழுதுகளில், யாருமற்ற நகர வீதிகளில், மெதுவாக நடந்து செல்கையில், சோடியம் விளக்குகளின் வெளிச்சத்தில், மழை ஒரு தங்கக் கம்பியாக, சரம் சரமாக இரங்கி கொண்டிருக்கும். அதன் ஒவ்வொரு துளியும், முகத்தில் ஊசியாக குத்தும் பொழுது, ஒரு வலியல்லாத, கூச்சம் கண்களை சுருங்க செய்யும். உலகதிதின் யாருமற்ற அந்தத்தில் நாம் மட்டும் தனித்திருப்பது போன்ற ஒரு பயம் நம்மை கவ்வி, வெகு வேகமாக நடக்கச் செய்யும். ஆனாலும் அந்த நேரத்தில், காலியாக இருக்கும் கடையில், ஒரு கப் சூடான தேநீருடன், ஒரு சிகரெட்டை பற்ற வைத்து, அதன் புகையை நெஞ்சம் முழுக்க நிறைத்து, நண்பர்களுடன் கதைத்த கணங்கள், மறக்க முடியவில்லை. இன்று வெளிநாட்டில், எனது அறையின் பால்கனியில் நின்று கொண்டு, பார்க்கும் பொழுது, மழை தனிமையை மட்டுமே முகத்தில் அறைந்து செல்கிறது. எதை பற்றியும் கவலையில்லாமல், கொட்டுவது மழை மட்டுமல்ல, கண்ணீரும்தான்!
Sunday, 9 December 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment